Monday, May 11, 2020

NISWAN MADARASA - WOMEN ARABIC COLLEGE AND MAKTHAB MADRASA



MADRASATHUN NISWANIS  SAALIHAATH

WOMEN ARABIC COLLEGE

7th Street PUDU NAGAR

VYASARPADI CHENNAI-39

MOBILE NO 95788 82905 , 73585 37262

                        99622 10628 , 94442 27034

TIMING 9:00am To 5:00pm


மத்ரஸா மக்களின் கோட்டை
மௌலவி காஜா நிஜாமுதீன் யூசுஃபி

மத்ரஸாக்கள் மக்களைப் பாதுகாக்கும் கோட்டை என்று சொன்னால் மிகையாகாது. எதிரிகளின் தாக்குதலிருந்து மக்களைப் பாதுகாப்பவை நாட்டின் வலிமைமிக்க கோட்டைகள் தான். இஸ்லாத்திற்கு எதிராக கருத்துத் தாக்குதல் மற்றும் ஆயுதத் தாக்குதல் தொடுப்பவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுபவை ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் மத்ரஸாக்கள் தான்.

எனினும், அந்த இஸ்லாமியக் கல்லூரிகளின் மீது எதிரிகள் பல விதங்களில் சேற்றை வாரி வீசுவார்கள். நம்மில் சிலரும் கூட மத்ரஸாவிலிருந்து வெளியேறுபவர்களுக்கு உலகைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர்களால் எதையும் சாதிக்க முடியாது. பழமைவாத சிந்தனை கொண்டவர்கள், போன்ற கிண்டலான நகைப்புக்குரிய வாசகங்களை கண்டனங்களாக வெளிப்படுத்துபவர்களும் உண்டு.

இங்கே ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல நினைக்கிறோம்: அரபி மத்ரஸாக்கள் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால், இந்தியத் திருநாட்டில் தாருல் உலூம் தேவ்பந்த் முதற்கொண்டு அல்லாஹ்வின் உதவியால் தோற்றுவிக்கப் பட்ட இந்த மத்ரஸாக்கள் மட்டும் இல்லையானால், இந்நாட்டில் இஸ்லாத்தின் அடையாளங்கள் துடைத்தெறியப்பட்டிருக்கும். முஸ்லிம்கள் அவர்களுடைய இஸ்லாமிய அடையாளங்களுட.ன் பாதுகாக்கப் பட்டிருக்க மாட்டார்கள். இந்த நாட்டின் சரித்திரம் படித்தவர்களுக்கு இதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்காது.

⛵நூஹ் (அலை) கப்பல்:

நூஹ் (அலை) அவர்கள் மக்களை ஏக இறைவனின் பால் 950 வருட காலங்களாக அழைத்தார்கள். ஆனாலும் அந்த மக்களில் சொற்ப நபர்களைத் தவிர மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. இந்நிலையில் நபி நூஹ் (அலை) அவர்களிடம் ஒரு கப்பல் கட்டுமாறு அல்லாஹ் பணித்தான். நூஹ் (அலை) அவர்கள் கப்பல் கட்ட ஆரம்பித்தார்கள். மக்கள் நபியைப் பார்த்து கிண்டலித்தார்கள். பரிகாசம் செய்தார்கள். நூஹே! என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டனர்.

அதற்கு நூஹ் (அலை) அவர்கள் நான் ஒரு வீடு கட்டுகிறேன். அநத வீடு தண்ணீரில் நடக்கும், என்று சொன்னார்கள். அதுவரையும் அந்த மக்கள் ஆற்றையோ கடலையோ பார்த்ததில்லை. நூஹ் (அலை) அவர்களுடைய அந்தப் பதிலைக் கேட்டுவிட்டு மக்கள் ஏளனம் செய்தார்கள்.  (தஃப்ஸீர் குர்துபீ)

வெளிப்படையாகப் பார்க்கும் போது நூஹ் (அலை) அவர்களுடைய பதில் ஏற்றக்கொள்ள முடியாதது போல் இருந்தது. ஆறோ கடலோ இல்லாத ஓர் ஊரில் எப்படி கப்பல் கட்ட முடியும். அது எப்படி ஓடும். எனினும் அது அல்லாஹ்வின் ஆணைப்படி வஹியின் உத்தரவுப்படி நூஹ் (அலை) செயல்பட்டார்கள். முடிவு என்ன ஆனது?

எந்தக் கப்பலைப் பார்த்து கிண்டலடித்தார்களோ அந்தக் கப்பலின் மூலம் தான் உலக முடிவு நாள் வரை சந்ததிகளைப் பாதுகாத்தான். நானும் நீங்களும் இன்று இந்த உலகில் இருக்கிறோம், என்றால் ஏளனம் செய்யப்பட்ட அந்தக் கப்பலின் மூலம் தான். ஏளனம் செய்தவர்களோ தண்ணீரில் மூழ்கி அழிந்தொழிந்து போய்விட்டார்கள். மலைக்கு மேல் ஏறி நின்றவர்களும் கூட வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு பெறமுடிய வில்லை.

அல்லாஹ்வின் வஹியின் மூலம் மட்டுமே பாதுகாப்பு கிடைத்தது. அவ்வாறே இந்த மத்ரஸாக்கள் அல்லாஹ்வின் வஹியின் கல்வி போதிக்கப்படும் இடங்கள். மக்களுக்கு இந்தக் கோட்டைகளில் தான் எல்லா வயைன பாதுகாப்பும் கிடைக்கும்.

⛵கிள்ர் (அலை) கப்பல்:

கிளிர் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் ஒரு கப்பலில் பயணித்தார்கள். போகும் வழியில் களிர் (அலை) அவர்கள் கப்பலில் ஓட்டையிட்டார்கள். மூஸா (அலை) அவர்கள் கப்பல் பயணிகளை மூழ்கடிக்கப் பார்க்கிறீர்களா? என்று விமர்சனம் செய்தார்கள். ஆனாலும் , அந்த ஓட்டைதான் அந்தக் கப்பலை அநியாயக்கார அரசனிமிருந்து காப்பாற்றியது, என்பது குர்ஆன் கூறும் வரலாறு.

ஓட்டை இருக்கத் தான் செய்தது. மக்கள் யாரும் மூழ்க வில்லை. இன்று மக்கள் மத்ரஸாக்கள் பற்றி ஏதாவது குறை சொல்லலாம். அவர்களுக்கு ஆங்கில அறிவோ மற்ற உலகியல் ரீதியான தகவல்ளோ தெரியாமல் இருக்கலாம். அது களிர் (அலை) கப்பலில் இருந்த ஓட்டையைப் போலத் தான். அவை மத்ரஸாவையும் மக்களையும் காப்பாற்றுமே தவிர அழித்துவிடாது.

⛵டைட்டானிக் கப்பல்:

இவ்விரண்டு கப்பலுக்கும் முரணாக அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கு முரணாக இருக்கும் கப்பல் எந்நேரத்தின் அழிவைச் சந்திக்கலாம். இறைவனை மட்டுமே நினைக்க வேண்டிய பேரபாயத்தைக் கடந்து செல்லும் கப்பல்களில் கூட நாடக அரங்கு, திரைப்படத் தியேட்டர், சொகுசு ஹோட்டல், நீச்சல் குளம் போன்றவை இருக்கின்றன. டைட்டானிக் என்ற சொகுசுக்கப்பல் மூழ்கியது நவீன கப்பல் பயணத்தின் மிகப் பெரிய வடு.

மேற்கத்திலய பணக்கார நாட்டவர் அதை லேஸில் மறக்கமாட்டார்கள். அல்லாஹ்வை நினைக்க வேண்டிய கடலில் ஆடம்பரமும் உல்லாசமும் உச்சகட்டத்தை அடைந்தால் அல்லாஹ்வின் கருணை எங்கிருந்து கிடைக்கப்போகிறது? 1912 ல் டைட்டானிக் தன்னுடைய முதல் பயணத்திலேயே பெரிய பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் இறந்தனர். அந்தக் கப்பல் மூழ்கிய இடத்தல் இன்றும் ஆராய்ச்சி நடக்கிறது. இன்றும் கடலுக்கடியில் கிடைக்கும் பழைய அலங்காரப் பொருள்கள் எல்லாம் ரொம்பத் தலைக் கிறுக்கி ஆடாதே! என்று மனிதனுக்கான எச்சரிக்கைகள். (நூல்: வினவுஙக்ள் விடைதருவோம்)

இல்மு என்பது... ?:

நபி (ஸல்) அவர்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் இல்மு - கல்வி என்றாலே இல்மு ஹதீஸ் - ஹதீஸ் கல்வியை மட்டுமே விளங்கப்படும். இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாஃ  (ரஹ்) அவர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது இல்மா? அல்லது உங்கள் கருத்தா? என்று கேட்பேன். அது நபி மொழியாக இருந்தால் இல்மு என்று சொல்வார்கள். ஹதீஸிலிருந்து ஆய்வு செய்து பெறப்பட்ட கருத்தாக இருந்தால் (சொந்த) கருத்து என்று சொல்வார்கள். (தத்வீனெ ஹதீஸ்)

நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்களும் நடத்திய மத்ரஸாக்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்றிருக்கிறார்கள். அபூதர்தா (ரலி) அவர்கள் டெமாஸ்கஸில் ஒரு மத்ரஸா நடத்தினார்கள். ஒரு நாள் மாணவர்களை கணக்கிட்ட பொழுது 1600 க்கம் அதிகமாக இருந்தார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) தங்களுடைய வீட்டிலேயே ஒரு மத்ரஸா நடத்தினார்கள். எனவே அந்த வீட்டின் பெயரே தாருல் குர்ராஃ - ஓதுபவர்களின் வீடு என்று பிரபல்யமாகிவிட்டது.

என்னிடத்தில ஹதீஸ் - நபிமொழிகளைப் பயிலக்கூடிய மாணவர்கள் மிக அதிகமாக வரவேண்டும். என்னிடம் கல்வி பயின்று அவர்கள் மனநிறைவோடு செல்ல வேண்டும், என்பது தான் என்னுடைய ஆசையும் லட்சியமும், என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். தன்னுடைய லட்சியத்தை அடைந்து விட்டுத்ன் உலகை விட்டார்கள். (அஸ்ஹாபுஸ்ஸுஃப்பா) இன்று அந்த உயர்தரமான கல்வியை கற்பதற்கு மாணவர்களைத் தேடவேண்டியிருக்கிறது.

மத்ரஸா என்பது....?:

ஒரே நபர் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. அதே போல் எல்லோரும் ஒரே வேலையையும செய்ய முடியாது. மத்ரஸா என்பது ஒவ்வொருவரும் மார்க்கத்தை அறிந்து கொள்வதற்கான இடம் என்பது மட்டுமல்ல. அதைவிடவும் விசாலமான அர்த்தம் உண்டு.

மார்க்கக் கல்வியை பயில்வதற்காகவும் பயிற்றுவிப்பதற்காகவும் ஒரு கூட்டம் தன்னை அர்ப்பணித்துத் தான் ஆகவேண்டும்.  இறைநம்பிக்கையாளர்கள் அனைவருமே (யுத்தத்திற்கு) புறப்பட வேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு குழு (மட்டும்) புறப்பட்டு விட்டு (மற்றவர்கள் மதீனாவிலேயே) தங்கியிருக்க் கூடாதா? ஏனெனில் அவர்கள் மார்க்க விளக்கத்தைப் பெற்றுக் கொண்டு யுத்தத்திலிருந்து திரும்பிவரும் தம் சமுதாயத்தவரை எச்சரிக்க வேண்டும், என்பதற்காக  (அல்குர்ஆன்- 9:122)

நபி (ஸல்) அவர்கள் எங்காவது சிறு படையை அனுப்பி வைத்தால் எல்லா நபித்தோழர்களும் அதில் செல்லத் தயாராகிவிடுவார்கள். மதீனாவில் நபியுடன் சிலர் மட்டுமே இருப்பார்கள். அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் சொல்லும் மார்க்க விஷயங்களைக் கேட்டு மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு போதுமான நபர்கள் (மாணவர்கள்) இருக்க மாட்டார்கள். அச்சமயம் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தை இறக்கிவைத்தான்.

மத்ரஸாக்களின் கடமையையும் அவசியத்தையும் இந்த வசனம் தெளிவாகவே உணர்த்துகிறது. கல்வி என்பது கற்பதற்காக மட்டுமல்ல. அதன்படி செயலாற்றுவதற்கும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதன்படி செயல்பட வைப்பதும் தான் என்பதையும் உணர்த்துகிறது.

மத்ரஸா தான் நம்முடைய பாதுகாப்பு:

திட்டமாக நாமே இந்த வேதத்தை (குர்ஆனை) இறக்கிவைத்தோம். மேலும் நாமே அதைப் பாதுகாப்பாளராக இருக்கிறோம், என்பதும் நிச்சயம். (அல்குர்ஆன் - 15:9)

இந்த வசனத்தில் அல்லாஹ்வே குர்ஆனைப் பாதுகாப்பதாக கூறியிருப்பதில் விசாலாமான அர்த்தம் உள்ளது. குர்ஆனுடைய வார்த்தையை மட்டுமல்ல; அதன் கருத்துக்களையும் பாதுகாப்போம். குர்ஆன் நிலைத்திருக்கத் தேவையான எல்லாப் பணிகளும கியாம நாள் (இறுதி நாள்) வரை நடைபெறும்.

குர்ஆனைப் பாதுகாக்கக் கூடியவர்களைப் பாதுகாப்போம். குர்ஆனுடைய கல்வியை பாதுகாக்கக் கூடியவர்களைப் பாதுகாப்போம். குர்ஆனுடைய கல்வியை கல்வியை படிப்பவர்களையும் பரப்புபவர்களையும் அதற்கு உதவியாக இருப்பவர்களையும் பாதுகாப்போம் போன்ற எல்லா அர்த்தங்களும் இதில் அடங்கும்.

அல்லாஹ்வின் இராணுவம்:

ஒரு மன்னர் தன் நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்காக அறிவித்தால் மன்னர் தானே எல்லைக்கு வந்து பாதுகாக்கப் போவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. அவருடைய ராணுவம் தான் பாதுகாக்கும். அதே போல், அல்லாஹ் தன் ராணுவத்தைக் கொண்டு இந்த குர்ஆனை பாதுகாக்கிறான். மத்ரஸாக்களில் தேர்ச்சி பெற்று வருபவர்கள் தான் அல்லாஹ்வின் ராணுவம்.

ராணுவத்தையே பலகீனமாக்கி விட்டால் எல்லைக் கோட்டை எப்படி பாதுகாக்க முடியும். நாட்டின் பொருளாதாரம் செழிக்க வேண்டும். சுகாதாரம் சிறக்க வேண்டும், என்பதற்காக பட்ஜெட்டில் அவற்றுக்கே அதிகப்படியான நிதியை ஒதுக்கிவிட்டால் ராணுவ பலம் என்னவாகும்? ராணுவத்தை பலகீனமாக்கிவிட்டு நாட்டின் எந்தத் துறை வளர்ச்சியடைந்தாலும் அதனால் என்ன லாபம்?

இஸ்லாம் தான் அதையும் படிக்கச் சொல்கிறது. இதையும் படிக்கச் சொல்கிறது, என்று விதண்டாவாதம் பேசி மத்ரஸாக்களை மறந்து விட்டால் இஸ்லாம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் நம்முடைய நிலை என்னவாகும்? என்பதை யோசிக்க வேண்டும். யுக முடிவு நாள் வரை அல்லாஹ் மார்க்கத்தைப் பாதுகாப்பான், என்பதற்கு அர்த்தம் நாம் அதைப் பற்றி கவலைப் படத்தேவையில்லை, என்பதல்ல. பாதுகாப்பாளர்களை நாம் தான் உருவாக்க வேண்டும்.

கொள்கைக் கோளாறின் அடிப்படை:

மார்க்கக் கல்வியை புறக்கணித்துவிட்டு உலகக் கல்வியின் மீது ஏற்படும் மோகம் கொடூரமான பின்விளைவை ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை. அப்பாஸிய்யாக்களின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் விஞ்ஞான ஆராய்ச்சியில் முன்னேறி இருந்தார்கள். கிரேக்க த்துவ நூற்கள் அதற்கு உதவின.

தற்கால முன்னேறிய விஞ்ஞானத்திற்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள் தான், என்பது பெருமைக்குரிய விஷயம். அதே சமயம் சில கிரேக்க தத்துவங்கள் இஸ்லாமியக் கொள்கைகளைக் காயப்படுத்தின. அப்பாஸியக் கலீஃபாவாக இருந்த மஃமூன் ரஷீத் கான்ஸ்டான்டிநோபிளுடைய (இஸ்தான்புல்) கிருத்தவ மன்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். மன்னரிடம் இருக்கும் கிரேக்க தத்துவ நூல்களை அனுப்பி வைக்கும்படி அதில் கேட்டிருந்தார். அந்த நூல்களை அனுப்பி வைப்பதில் மன்னருக்கு தயக்கம் இருந்தது. அப்பொழுது கிருத்தவ பாதிரிமார்கள், கிரேக்க தத்துவ நூற்களை முஸ்லிம் மன்னருக்கு அனுப்பி வைக்கும்படி வற்புறுத்தினர்.

ஏனெனில், இந்த நூற்களை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக தங்களுடைய மார்க்கக் கொள்கையில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும், என்று கூறினர். பாதிரிமார்கள் நினைத்தது நிதர்சனமாக நடக்கவும் செய்தது. (முஸல்மானோங்கா உரூஜோ ஜவால்)

இஸ்லாமியக் கொள்கைகளை பாமரனும் விளங்கிக் கொள்ளும் வகையில் சாதாரண முறையில் குர்ஆன் விளக்கி வைக்கும். கிரேக்கத் தத்துவங்கள் முஸ்லிம்களின் சிந்தனையைக் கெடுத்துவிட்டது. கிரேக்க இறையியல் கோட்பாடுகள் குளறுபடியானவை. 

அந்தத் தத்துவங்களின் விளைவாக இஸ்லாமியக் கொள்கைகள் தொடர்பாக வித்தியாசமான விசித்திரமான சர்ச்சைகள் உருவெடுத்தன. அல்லாஹ்வுடைய பேச்சு எப்படிப்பட்டது? குர்ஆன் படைக்கப்பட்டதா? படைக்கப் படாததா? போன்ற சர்ச்சைகள் தோன்றியதால் மார்க்கத்தின் பெயரால் முஃதஜிலா, முர்ஜியா போன்ற புதுப்புது கொள்கைவாதிகள் உண்டானார்கள்.

கிரேக்க தத்துவதும் வேதவாக்கா?:

இஸ்லாம் தொடர்பான எந்தக் கொள்கையைப் பற்றி பேசப்பட்டாலும் கிரேக்க தத்துவம் என்ற அளவுகோல் வைத்து சரி பார்க்கப்படும். அதற்கு ஒத்துவரவிலலையானால் இந்த மார்க்கக் கொள்கை அறிவுக்கு முரண் என்று கூறி ஒதுக்கப்படும்.

நவீன விஞ்ஞான ஆராய்ச்சிகள் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் மார்க்கம் பற்றிய குர்ஆனுடைய கருத்தைக் கூறினால் தற்கால விஞ்ஞான ஆய்வுகளோடு - சிந்தனை கெட்ட அறிவோடு தொடர்பு படுத்திப் பார்க்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது. இவையனைத்தும் உயர்கல்வி செய்த மூளைச் சலவையின் விபரீத விளைவுகள். மார்க்கத்திற்கு முரணான எந்தக் கருத்தும் அறிவுக்குப் பொருத்தமாக இருக்க முடியாது, என்பது நிச்சயம்.

பகிரங்க வழிகேடு:

நபித்தோழர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் உபதேசம் செய்ய ஆரம்பிக்கும் போதெல்லாம் அல்லாஹ் தீர்ப்பு செய்பவன். அவன் நீதமாக நடந்து கொள்பவன். (அதில்) சந்தேகம் கொள்பவன் நாசமாகி விட்டான். என்று சொல்வார்கள். ஒரு நாள் அவர்கள் உபதேசம் செய்யும் போது இப்படி கூறினார்கள்: உங்களுக்கு பின்னால் நிறைய குழப்பங்கள் ஏற்படும். குழப்பங்கள் அதிகரித்துவிடும் (அனைவருக்காகவும்) குர்ஆன் திறந்து வைக்கப்படும். விசுவாசி, முனாஃபிக், (நயவஞ்சகன்) ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை என அனைவரும் அந்த குர்ஆன் மூலம் ஆதாரம் காட்டுவார்கள்.

ஒரு மனிதர் குர்ஆனை ஒதிவிட்டு, நானோ குர்ஆனை ஓதிவிட்டேன். (அதற்கு விளக்கமும் கூறிவிட்டேன்) பிறகும் மக்கள் ஏன் என்னை பின்பற்றுவதில்லை. குர்ஆனைத் தவிர ஏதாவது புதிய விஷயத்தை கூறினால் தான் பின்பற்றுவார்கள் போலும் என்று சொல்லுமளவுக்கு கால சூழ்நிலை மோசமானாலும் அது பாரதூரமான விஷயமல்ல. மேலும் முஆது (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மார்க்கத்திற்கு முரணான) புதுமையை விட்டும் உஙகளை எச்சரிக்கிறேன். ஏனெனில், இப்படிப்பட்ட புதுமைகள் வழிகேடுதான். அறிவாளியின் சருகுதலை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். ஷைத்தான் சில சமயம் அறிவாளியின் நாவில் வழிகேடான பேச்சை பேசச் செய்வான். நயவஞ்சகனும் சில சமயம் உண்மை பேசுவான்... (அபூதாவூத்) குர்ஆனை விட்டுவிட்டு வேறொன்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பகிரங்க வழிகேடு.

இறுதி நாளின் இருண்ட அடையாளம்:

மக்களிடம் மார்க்கக் கல்வி குன்றிப் போவதும் ஆலிம்கள் குறைந்து போவதும் கியாமத்துடைய அடையாளம், என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ஒரு நேரத்தில் மார்க்கத்தை கற்றறிந்த எந்த ஆலிமும் இருக்க மாட்டார். மக்கள் மார்க்க அறிவற்ற மடையர்களை தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் பிரச்சினைகளுக்கு மார்க்கத் தீர்வு கேட்கப்படும்.

அவர்கள் எதையும் தெரியாமலேயே ஃபத்வா விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். தாங்களும் வழிகெட்டுப் போவார்கள். மற்றவர்களையும் வழிகெடுத்து விடுவார்கள், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இல்மு - மார்க்க அறிவு இவ்வுலகை விட்டும் உயர்த்தப்பட்டு விட்டால் அது போன்றதொரு பெரிய நஷ்டம் வேறெதுவும் இருக்க முடியாது. அதைத் தடுக்க வேண்டுமானால் இல்முடையவர்களை - ஆலிம்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். மத்ரஸாக்கள் செழிப்பாக இருக்க வேண்டும்.

மார்க்கக் கல்வியின் அக்கறையின்மை தொடருமேயானால் இன்னும் சிறிது காலத்திற்குப் பின் முறையான ஆலிம்களே கிடைக்க மாட்டார்கள். அக்பர் உருவாக்கிய தீனெ இலாஹி போல் வழிகேட்டின் வாசல் திறக்கப்படும். 

அக்பர் போன்ற முஹலாய மன்னர்களின் வரிசையில் மார்க்கப்பற்று மிக்க ஔரங்கசீப் வந்தாரென்றால் முஜத்தித் அல்ஃபெஸானீ ஷைக் அஹ்மத் ஸர்ஹிந்தி (ரஹ்) அவர்கள் இனைய தலைமுறையினரிடம் ஏற்படுத்திய மர்க்க எழுச்சி தான் காரணம். 

அது போன்றதொரு மார்க்க எழுச்சியை ஏற்படுத்துவதற்கு இன்றும் பாடுபட்டாக வேண்டும்.



No comments:

Post a Comment